சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. வழக்கம்போல வணிகவியல், கணித அறிவியல் பாடங்களையே மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7 முதல் 27ம் தேதி வரை நடந்தது. 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதை தொடர்ந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3ம் தேதி நடந்தது. மொத்த இடங்களில் 5 சதவிகிதம் சிறப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 6 ஆயிரத்து 200 சிறப்பு இடங்களில் 2 ஆயிரத்து 300 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 4ம் தேதி (நேற்று) தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னையில் மாநில கல்லூரி, ராணிமேரி மகளிர் கல்லூரி, அண்ணா சாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் கூட்டம் அலைமோதியது.
மாநில கல்லூரியில் நடந்த கலந்தாய்வு குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ராமன் கூறுகையில், ‘‘முதல் நாளில் வணிகவியல், கார்ப்பரேட் செக்ரட்டிரிஷிப், பொருளாதாரம், கணிதம், புள்ளியியல், உளவியல் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு 600க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையை விட மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. வியாழக்கிழமை (இன்று) பிஎஸ்சி பட்டபடிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். எங்கள் கல்லூரியில் சேர தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி 133 நாடுகளில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்” என்றார்.