Saturday, July 19, 2025
Home செய்திகள்Banner News எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில்தான் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் புகழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு

எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில்தான் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் புகழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது: அமைச்சர் சேகர்பாபு

by Francis

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (12.06.2025) சென்னை, கீழ்ப்பாக்கம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கலவல கண்ணன் செட்டி சாரிடீஸ் மூலம் நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியானது அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் திருக்கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை நீண்ட காலமாக செலுத்த முடியாத சூழலில் பள்ளியை திருக்கோயிலிடம் ஒப்படைத்து விட்டார்கள். அன்றைய தினம் இப்பள்ளியில் பயின்று வந்த 600 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அந்த பள்ளியை திருக்கோயில் நிர்வாகமே ஏற்று நடத்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் தற்போது 1070 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தாண்டு 170 மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில வெளியில் சென்று இருக்கின்றனர். இப்பள்ளிக்கு ஏற்கனவே ரூ.1.78 கோடி செலவில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்திடும் வகையில் ரூ. 11.15 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளுடன் 32 வகுப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், 5 ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் இக்கட்டடம் மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். இதனால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 25 பள்ளிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10 கல்லூரிகளில் 22,455 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த நான்காண்டுகளில் முதலமைச்சர் ரூ.120 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளார்.

அதனால் தான் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பல பள்ளிகள் அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. பழனி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு அப்பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லாமல் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் பணிகளுக்கும், திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகளுக்கும் 38 மாவட்டங்களுக்கும் வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் நில அளவர்கள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் துதமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை ரூ.7,683.38 கோடி மதிப்பிலான 7,597.81 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும், 2,02,202 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பணிகளை வேகப்படுத்தியகதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் தொய்வை சரிசெய்து வெற்றிகரமாக துறையை வழிநடத்தி வருகிம்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்தாண்டு பழனியில் நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்படுத்திய தாக்கத்தினால்தான் இப்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஓடி ஓடி மதுரையிலே மாநாடு நடத்துகிறார்கள். எங்களுடைய பணி என்பது மதம் சார்ந்த மக்களை பிரிப்பதல்ல, எந்த மதத்தினராக இருந்தாலும் அவரவர்கள் விரும்புகின்ற அமைதியான வழியில் அவரவர் விரும்புகின்ற தெய்வங்களை வழிபடவும், தொழுவதற்கும் தடையாக இருக்க மாட்டோம். மதத்தால், மொழியால், இனத்தால் பிளவுபடுத்துபவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த சக்திகள் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் புறக்கணிக்கப்படுவார்கள். பாணியிலே சொல்ல வேண்டுமென்றால் விரட்டியடிக்கப்படுவார்கள்.

எடப்பாடி பழனிசாமி யாரோ எழுதிக் கொடுப்பதை யாரோ சொல்லுவதை, காற்று வாக்கில் வருவதை உள்வாங்கிக் கொண்டு அறிக்கை விடுகிறார். புரிதல் இல்லாத ஒரு அறிக்கை இராமேசுவரம் திருக்கோயிலில் உள்ளூர் பக்தர்களை அனுமதிப்பதில் அப்படி எந்த விதமான நிலைப்பாடும் இல்லை. உள்ளூர் பக்தர்கள் சிறப்பு வழியாக இப்போதும் அனுமதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் ராமேஸ்வரத்திற்கு சென்று அங்கு இருக்கின்ற நிலை அறிந்த பிறகு அறிக்கை தரட்டும். நான் பதில் சொல்ல தயாராக இருக்கின்றேன். எல்லா திருக்கோயில்களிலும் உள்ளூர் பக்தர்களை அடையாளம் கண்டு, தரிசனம் செய்வதற்கு அங்கே பணியில் இருப்பவர்கள் அதற்குண்டான ஏற்பாட்டை நல்கி கொண்டு தான் இருக்கின்றார்கள்.

நாம் யாரை விரும்புகிறோம் என்பதை விட நம்மை யார் விரும்புகிறார் என்பது தான் முக்கியம். இன்றைய தமிழ் கடவுள் முருகப் பெருமான் திராவிட மாடல் ஆட்சி நாயகன் தமிழக முதல்வர் அவர்களை விரும்பி கொண்டிருக்கின்றார். ஏனென்றால் இந்த அரசு பொறுப்பேற்றபின் இதுவரை நடத்தப்பட்ட 3,109 திருக்கோயில்களில் 117 திருக்கோயில்கள் முருகன் திருக்கோயில்களாகும். அதுமட்டுமல்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 மூத்த குடிமக்கள் ரூ.2.14 கோடி அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தாண்டும் 2,000 நபர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பெருந்திட்ட வரைவின்கீழ் (Master Plan) ரூ.872.62 கோடி மதிப்பீட்டில் பழனி, திருச்செந்தூர், சிறுவாபுரி, மருதமலை, குமாரவயலூர், காந்தல் ஆகிய முருகன் திருக்கோயில்களில் திருப்பணிகளும், அறுபடை வீடு மற்றும் அறுபடைவீடு அல்லாத முருகன் திருக்கோயில்களில் ரூ.1,085,63 கோடி மதிப்பீட்டில் 884 திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

திருத்தணிக்கு மாற்றுப்பாதையும், சிறுவாபுரிக்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சர் எ.வ. வேலு இரண்டு முறை இப்பணிகளை ஆய்வு செய்துள்ளார். மருதமலையில் 184 அடி உயரம் கொண்ட முருகர் சிலையும், திண்டலில் 180 அடி உயரம் கொண்ட முருகர் சிலையும், திமிரியில் 114 அடி உயர முருகன் சிலையும் நிறுவுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் சவால் விட்டு சொல்வதெல்லாம், இது போன்ற திருப்பணிகளை தமிழ் கடவுள் முருகனுக்கு எந்த ஆட்சியாவது செய்து பெருமை சேர்த்திருக்கின்றார்களா? இந்த ஆட்சியில் தான் இத்தகைய பெருமை சேர்த்துள்ளோம். தமிழ் வாழும், தமிழ் வெல்லும். ஆகவே அரண்டு கிடப்பவர்கள், மிரண்டு கிடப்பவர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் முருகன் கையிலே இருக்கின்ற வேல் நிச்சயம் எங்களுக்கு 2026 ஆம் ஆண்டு வெற்றியைக் குவிக்கும்,

நயினார் நாகேந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. நீ வா நீ வா என்று கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேல் ஏறி படுத்துக் கொள்ளுங்கள் என்ற பழமொழி அவருக்கு பொருந்தும். திமுக கூட்டணியில் இருக்கின்ற அனைத்து தோழமைக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றது. கூட்டணியைத் தேடி திமுக தலைமையில் அமைந்திருக்கின்ற கட்சிகள் எங்கும் செல்லவில்லை. தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான் கூட்டணி கூட்டணி என்று பறந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழக முதல்வர் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி வலுவாக இருக்கின்றது. இந்த வலிமையாக கூட்டணியை பார்த்துதான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் கூட்டணியை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நேற்றைய தினம் முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் 13 கிலோமீட்டர் ரோடுஷோ நடத்தி இருக்கின்றார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் நலத் திட்டங்களை வழங்கியுள்ளார். இன்று காலை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளார். நெருக்கடியில் இருப்பவர் தானே தவிர நாங்கள் இல்லை. திருக்கோயில்களில் திருமணங்களை நடத்துவதற்கு வேண்டுதலோடு மக்கள் முன்வருகின்றனர். ஒரே முகூர்த்தத்தில் அதிக எண்ணிக்கையில் அனுமதி கோருவதை மறுத்தால் படுகின்ற வருத்தம் சொல்லொணா துயரமாக ஆளாகின்றது. ஆகவே அனுமதிக்கின்ற நிலை ஏற்படுகின்றது. இருந்தாலும் எந்த விதமான அசம்பாவிதம் ஏற்படாமல் அதையும் ஒரு வழிமுறையை கடைபிடித்து திருமணங்களை நடத்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் பொ. பெரியசாமி, கூடுதல் ஆணையர்கள் திருமதி சி. ஹரிப்ரியா, பொ.ஜெயராமன், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன், இணை ஆணையர்கள் திருமதி இரா.வான்மதி, சி.குமரதுரை, உதவி ஆணையர் ஆர்.கார்த்திகேயன், செயல் அலுவலர் திருமதி முத்துலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi