சண்டிகர்: அரியானாவில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் கட்சியில் 90 தொகுதிக்கு 2,556 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அரியானாவில் கடந்த 2 முறையாக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த காங்கிரஸ், வரும் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற மிகுந்த நம்பிக்கையில் பணியாற்றி வருகிறது. இதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ெமாத்தமுள்ள 10 தொகுதிகளில் 5 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.
ஆளுங்கட்சியான பாஜக 5 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதனால் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கணித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் சீட் கேட்டு வந்துள்ளன. இதுகுறித்து அரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேவல் திங்ரா கூறுகையில், ‘மொத்தமுள்ள 90 இடங்களுக்கும் 2,556 பேர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பொருத்தமானவர்களை தேர்வு செய்ய மாநில பிரிவு மற்றும் தேசிய தலைமை ஆய்வு நடத்தி வருகிறது. நிலோகாரி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 88 பேர் சீட்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்’ என்றார். இதுகுறித்து முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், ‘அரியானாவில் காங்கிரஸ் அலை வீசுவதால், ஏராளமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அரியானா மக்கள் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுக்க ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்’ என்றார்.