திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் உள்ள கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தனராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜூடித் டேனியல் அனைவரையும் வரவேற்றார். திருவள்ளூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிக் கோட்டப் பொறியாளர் எஸ்.ஜே.தஸ்னவிஸ் பெர்னான்டோ, சென்னை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிக் கோட்டப் பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர் பிரவீன், இளநிலைப் பொறியாளர் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருவள்ளூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் சிற்றரசு தொடங்கி வைத்தார். சென்னை சாலைப் பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் விசாலாட்சி பள்ளி மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். அப்போது சாலைப் பாதுகாப்பு குறித்த விளக்கக் காட்சிகளுடன், மாணவ, மாணவியர்கள் தங்களுடைய இல்லத்தில் இருந்து பள்ளி செல்லும் வரை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள் குறித்தும், வாகன உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கக் கூடாத காரணம் குறித்தும் தோழன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீஸ்வரன் மற்றும் கோவர்த்தனன் ஆகியோர் விளக்கி கூறினர்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்காக சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதை, ஓவியம் மற்றும் வாசகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சாலை பாதுகாப்பு துண்டறிக்கை வழங்கப்பட்டது. பிறகு சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர். இதில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.