திண்டிவனம்: தமிழக அரசுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கைவிட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின் கட்டண உயர்வு மூலம் 3 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வருவாய் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அடுத்த வாரம் நடைபெறுகின்ற பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டு கூட்டத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட தேதி அறிவிக்கப்படும். வன்னியர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறிய தமிழக அரசு, தற்போது கொடுக்க முடியாது என்று மறுத்து வருகிறது. திண்டிவனம் – திருவண்ணாமலை ரயில் பாதை திட்டதுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு உரிய நிதி ஒதுக்கி விரைவில் பணிகள் முடிக்கப்பட வேண்டும். காவிரி நீரை நம்பி விவசாயிகள் ஒன்றரை லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளதால் தமிழக அரசு காவிரி நீரை திறந்து விட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழுக்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. அதிக வரி செலுத்துகின்ற தமிழகத்திற்கு குறைந்த அளவே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. இதனை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.