சென்னை: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக, 2022-2023ம் ஆண்டிற்கு தேர்வு செய்யபப்பட்ட அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அரசாணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று சென்னை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ‘தந்தை பெரியார் கூட்ட அரங்கத்தில்’ வழங்கினார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்வு செய்யப்பட்டுள்ள 100 தமிழறிஞர்களுக்கு இந்த ஆண்டு மாத உதவித்தொகை 3500 ரூபாயும், 500 ரூபாய் மருத்துவப்படியும், தமிழ்நாடு முழுவதும் சென்று வருவதற்கு பேருந்தில் கட்டணமில்லா பயணத்திற்கான உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். குறிப்பாக எந்த மொழியில் இருந்தாலும் தமிழ் மொழியில் பெரிய அளவில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற உத்தரவு இருக்கிறது. மேலும் அதற்கான அபராத தொகையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்தாவர்களுக்கு அபராதம் விதிக்க அரசு தயங்காது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அவ்வை அருள், துணை இயக்குநர் சத்தியபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.