வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் அப்பகுதி மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மைதானத்தின் சில இடங்களில் புற்கள் மண்டியும், முட்புதர்களாகவும் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் காணப்படுகின்றன. விஷ ஜந்துக்களின் கூடாரமாக பள்ளி மைதானம் மாறி வருவதால் நடைபயிற்சியில் ஈடுபடுவதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.
மேலும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பள்ளி திறப்பதற்குள் பள்ளி மைதானத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். மேலும் மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மைதானத்தை உருவாக்கி தர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.