வேலூர்: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஐஜி முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் உள்ளிட்டோர் மனுக்கள் பெற்றனர். அப்போது காட்பாடி அடுத்த சீக்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் அளித்த புகார் மனுவில், ‘காட்பாடியை சேர்ந்த வேலூர் மாவட்ட அமமுக செயலாளர் ஏ.எஸ்.ராஜா, அரசு மற்றும் தனியார் கல்லூரியில் வேலை வாங்கித்தருவதாக கூறி என்னிடம் பணம் கேட்டார். அதை நம்பி எனது வீட்டை அடமானம் வைத்து ரூ.9 லட்சம் கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கித்தராமல் தட்டிக்கழிக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், காட்பாடி அடுத்த கரசமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாக்கியா, தாராபடவேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி ஆகியோர் அளித்த மனுவில், ‘கடந்த 2019ம் ஆண்டு அரசு வேலை வாங்கி வருவதாக கூறி 2 பேரிடம் தலா ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டு இதுவரையிலும் வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை திரும்பி கேட்டால், சரிவர பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்’ என்றனர். இவர்களைபோல், மேலும் பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அமமுக மாவட்ட செயலாளர் ராஜா ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு டிஐஜி உத்தரவிட்டார்.