பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் அரசு ஆதி திராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி கடந்த 94 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், கோபுரசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்பட்டன. இதையறிந்த மெட்ராஸ் சென்ட்ரல் ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த பள்ளி வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக 2 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் காந்திமதி தலைமை தாங்கினார்.
பூந்தமல்லி ஒன்றிய கவுன்சிலர்கள் கவுதமன், கண்ணன், காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா சரவணன், கல்வியாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவனத்தின் தலைவர்கள் கௌரிஷ் சுப்பிரமணியன் மற்றும் கௌசல்யா ஆகியோர் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புதிய நூலகம், அரசு தொடக்கப்பள்ளியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள டேபிள் டென்னிஸ் விளையாட்டு திடல் ஆகியவற்றை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மனோகரன் மாலினி, டேவிட் நளினி, இளங்கோவன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


