ஜெய்ப்பூர்: ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதே மோடி, பாஜ.வின் ஒரே குறிக்கோள் என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் அடுத்த மாதம் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் முயற்சியாக காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்நிலையில், தவுசா மாவட்டத்தின் சிக்ராய் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, “ராஜஸ்தானில் பாஜ ஆட்சியில் இருந்த போது எத்தனை திட்டங்களை அறிமுகப்படுத்தியது? ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதே மோடி, பாஜ. அரசின் ஒரே குறிக்கோள், மக்கள் நலனுக்காக அல்ல. ஏழை மக்களின் பணத்தை சுரண்டி பெருந்தொழிலதிபர்களின் பாக்கெட்டை நிரப்புவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். வளர்ச்சியை பற்றி பேசாமல், மதம் மற்றும் ஜாதி பிரச்னைகளை பாஜ தூண்டி விடுகிறது. மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.