‘‘ஹனிபீ மாவட்டத்தில் தர்மயுத்த நாயகரால் பணி நியமிக்கப்பட்ட அரசு அலுவலர்கள், பெரும்பாலும் அந்த மாவட்டத்திலேயே தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனராமே..உண்மையா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மையே தான். இதனால் தான் ஹனிபீ மாவட்டத்தில் இன்னமும் தர்மயுத்த நாயகரின் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதாகவே கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கான டிரைவர் பதவிகளுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களே தற்போது வரை தொடர்ந்து பணிபுரிந்து வருவதால், இதர துறைகளில் பணிபுரியும் டிரைவர்கள் தங்களுக்கு அதிகாரமிக்க அதிகாரிகளுக்கு காரோட்டும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இருந்து வருகின்றனர். இதில் கலெக்டருக்கு காரோட்டும் நபரின் உறவினர் ஒருவர், கலெக்டர் அலுவலக முகாம் அலுவலக உதவியாளராகவும், மற்றொரு உறவினர் கலெக்டருக்கே தபேதாராகவும் பணிபுரிந்து வருகிறாராம். இதேபோல டிஆர்ஓவின் டிரைவர், கலெக்டரின் டிரைவருக்கு சகோதர வகை உறவினர்.
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் டிரைவாக இருப்பவர், கலெக்டர் டிரைவரின் மாமா வகை உறவினர். மாவட்ட ஊரக வளர்ச்சி துறை டிரைவரும் உறவினர் தான். இப்படி ஹனிபீ மாவட்டத்தின் அதிகாரமிக்க துறைகளில் ஒரே குடும்பத்தின் உறவினர்கள், டிரைவர்களாக பணியாற்றி வருவதால் தர்மயுத்த நாயகர் தரப்புக்கு இவர்கள் மூலம், மாவட்ட துறைவாரியான தகவல்கள் பரிமாறப்படுவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை மாநில தலைவரின் என் மண் என் மக்கள் நடைபயணம் மலைக்கோட்டை மாநகரில் 3 மணிக்கு தொடங்கும் என முதல்நாள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நல்ல நேரம் மாலை 5.45 மணிக்கு மேல் தான் இருந்ததால் 6 மணிக்கு தான் நடை பயணம் தொடங்கியது. முதல்நாள் பக்கத்து மாவட்டமான மன்னர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லாததால் மறுநாள் மலைக்கோட்டை மாநகரில் அந்த தப்பு நடந்து விடக்கூடாது என்பதற்காக மாநகர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஒரு வேனுக்கு 30 பேர் வீதம் மொத்தம் 40 வேன்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டு இருந்தார்கள்.
இதில் ஒவ்வொருவருக்கும் தலா 300 ரூபாய் கொடுக்கப்பட்டதாம்… 3 மணி நேரம் காலதாமதமாக தொடங்கிய நடைப்பயணத்தால் காத்து கிடந்த தொண்டர்கள் மாநில தலைவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மலைக்கோட்டை மாநகரில் நடைபயணம் வெற்றிகரமாக நடப்பதற்காக பெரிய பெரிய கடைகளில் கரன்சி வசூலிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா. ’’தீபாவளி வசூல் வேட்டையில் கில்லாடியா இருக்காராமே தீயணைப்புகாரரு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறை டிரைவர், அவர் பெயருக்கு ஏற்ற மாதிரி ரொம்ப சுதந்திரமா செயல்பட்டு வர்றாராம். இவரு முக்கிய அதிகாரிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார். தன் மாவட்டம் மட்டும் இல்லாமல், மாவட்டம் விட்டு மாவட்டம் போய் வசூல் செஞ்சு இருக்காரு. இங்க சில லட்சம் பார்த்த சுதந்திரமான டிரைவர், தன் வண்டியை சத்தியமங்கலம் பக்கம் விட்டு இருக்காரு. அங்க போய் அங்கு உள்ள கல்குவாரி உரிமையாளரை சந்திச்சு பேசி வசூல் வேட்டையில் ஈடுபட்டு இருக்காரு. இந்த விவரம் அந்த மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு அதிகாரிகளுக்கு தெரியவந்துச்சு.
இதுல இருதரப்புக்கு இடையே மோதல் வந்து, எங்க ஏரியாவுக்கு நீ எப்படி வரலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து ஏன் இப்படி வசூல் பண்ணறீங்க. உங்கள யார் வர சொன்னானு சரமாரியா கேள்வி கேட்டு இருக்காங்க. அதிகாரிகள் தயவு எனக்கு இருக்கு. என் கிட்ட எல்லாம் இப்படி கேள்வி கேட்க கூடாது. நான் அப்படி தான் வசூல் செய்வேனு சொல்லிட்டு சுதந்திரமா அடுத்த வசூலுக்கு கிளம்பி இருக்காரு. ஏற்கனவே, இது மாதிரி வசூல் மேட்டரில் சிக்கிய அனுபவம் இவருக்கு இருக்கறதால, இப்போது எப்படி சிக்காமல் வசூல் செய்வது என்பதில் கில்லாடியா மாறி விட்டாராம். இவர பார்த்து கோவை மட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டக்காரங்க கூட பயப்பட ஆரம்பிச்சுட்டாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.