சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (என்ஐஆர்எப்) தரவரிசை பட்டியலில் 10ம் இடமும், அரசு மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் அகில இந்திய அளவில் முதல் இடமும் பிடித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை குறைத்து மதிப்பிட முடியாது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மருத்துவ செலவு குறைவாக உள்ளது. அதுமட்டுமின்றி குறைந்த செலவில் சிறப்பான சிகிச்சையை தமிழ்நாடு வழங்கி வருகிறது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்குச் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கைதான். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் அனைத்து வகையான மருத்துவ வசதிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சென்னை மருத்துவ கல்லூரி இந்தியாவிலும், ஆசியாவிலும் உள்ள பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும்.
இந்த கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சிறந்து விளங்குகிறது. எம்.பி.பி.எஸ், பி.பார்ம், பி.எஸ்சி நர்சிங், எம்டி அனஸ்தீசியாலஜி, எம்டி உயிர்வேதியியல் உள்ளிட்ட படிப்புகளில் சிறந்து விளங்குகிறது. இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இந்த கல்லூரியில் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் செய்முறை பயிற்சி வழங்கப்படுகிறது.
இதனால் தரமான மருத்துவர்கள் உருவாகி மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். இப்படி அனைத்து மருத்துவ துறைகளிலும் சிறப்பாக செயல்படும் சென்னை மருத்துவக் கல்லூரி 2024ம் ஆண்டு என்ஐஆர்எப் (National Institutional Ranking Framework) இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் 10ம் இடமும், மாநில அரசுகள் நடத்தும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் அகில இந்திய அளவில் முதல் இடமும் பிடித்துள்ளது.
கடந்த காலங்களில் 2019ம் ஆண்டு 16ம் இடமும், 2021ம் ஆண்டு 14ம் இடமும், 2022ம் ஆண்டு 12ம் இடமும், 2023ம் ஆண்டு 11ம் இடமும் பிடித்திருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ஆய்வகம், புதிய வகுப்பறை உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்திய காரணத்தால் இந்த ஆண்டு 10ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நேரில் சென்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் தேரணிராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.