சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு தேவையான மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு சர்வதேச டெண்டர் கோரியுள்ளது. தொழில் நுட்பத்திறனில் உலக அளவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி, மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உயர்கல்வி துறையின் மூலம் 22.4.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உயர் அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ், ஒன்றிய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப தரநிலை குழுவினர் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி மடிக்கணினியின் செயல்திறன், நினைவகத்தின் அளவு, மென்பொருள், மின்கலத்தின் பேட்டரி திறன், வன்பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களுக்கான விவரக் குறிப்புகளை இறுதி செய்தனர். மேலும் மென்பொருள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிலையில் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டர் கோரியுள்ளது. அந்த டெண்டரில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள நிறுவனங்கள் ஜூன் 26ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டரில் மடிக்கணினியின் செயல்திறன் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளது. இதன்படி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி கொண்ட ஹார்டு டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் திரை, ப்ளூடூத் 5.0 மற்றும் 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 செல் லித்தியன் அயன் பேட்டரி, முன்புறத்தில் 720 பி எச்டி கேமரா, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல் திறன்கள் கொண்ட வகையாக இந்த மடிக்கணினிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழங்கப்படும் மடிக்கணினிகளுக்கு ஓராண்டு வாரண்டி அளிக்க வேண்டும்.
மடிக்கணினி விநியோகம் செய்யும் நிறுவனம் இதுதொடர்பாக மாணவர்களின் குறைகளுக்கு தீர்வு காண தனி அழைப்பு மையம் அமைக்க வேண்டும் என்று இந்த டெண்டர் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அறிவித்தபடி இந்த நிதி ஆண்டில் இருந்தே மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிடும் பணிகளை விரைந்து மேற்கொள்ள விநியோக திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளதாக எல்காட் அதிகாரிகள் தெரிவித்தனர்.