சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கோவிட் -19 பெருந்தொற்றுக் காலத்திலே அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை 1.4.2026 முதல் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை இந்தாண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையை பரிசீலித்து, ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை 1.10.2026 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம். அதன்படி ஒரு அரசு ஊழியர் 2020 ஏப்ரல் 1ம் தேதி 15 நாட்கள் ஈட்டிய பணமாக்கல் ஒப்படைத்திருந்தால் இந்த வசதியை பெற 1.4.2026 அன்று தகுதியுடையவராவார். அதேபோல் 2019 அக்டோபர் 15ம் தேதி ஒப்படைந்திருந்தால் 15.8.2025ம் தேதி இந்த வசதியைப் பெற தகுதியுடையவராவார். இந்த உத்தரவு அனைத்து மாநில நிறுவனர்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், நிறுவனங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியலமைப்பு, சட்டரீதியான அமைப்புகளுக்கு பொருந்தும்.