சென்னை: கிண்டியில் அரசு மருத்துவர் மீதான தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரை கத்தியால் குத்திய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்; கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் – காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.