* 7 பேர் படுகாயம்
* அதிரடி சஸ்பெண்ட்
கெங்கவல்லி: சேலம் மாவட்டம், ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை கல்லுக்குட்டு, தவளைப்பட்டிக்கு டவுன் பஸ் சென்றது. டிரைவர் செல்வராஜ் (55) பஸ்சை ஓட்டிச்சென்றார். பஸ்சில் பொதுமக்களுடன், தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளும் சென்றுள்ளனர். கல்லுக்கட்டு செல்லும் வழியில், பெரியகருப்பு கோயில்மேடு பகுதியில் பஸ் சென்ற போது, எதிரே தனியார் கல்லூரி பஸ் வந்தது. இதனால் மேடான பகுதியில் சென்ற அரசு பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி வரத்தொடங்கியது. உடனே கண்டக்டர் ராமலிங்கம் கீழே குதித்து பஸ்சின் பின்புற டயர் பகுதியில் கற்களை வைத்து நிறுத்த முயன்றார்.
ஆனால், பஸ் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, விவசாய தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல் கேட்டு, அப்பகுதியினர் வந்து அவர்களை மீட்டனர். இதில் டிரைவர் செல்வராஜ், மாணவிகள், குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆத்தூர் ஊரக போலீசார் விசாரித்ததில் செல்போனில் பேசியபடி பஸ்சை டிரைவர் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, டிரைவர் செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.