அரியலூர்: தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயராது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அரியலூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பேருந்து கட்டண உயர்வு என்ற தகவல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதையொட்டி சில அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுடைய பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி சென்றனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மக்கள் கருத்துக்களை கேட்டு அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அந்த வகையில் தான் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. எனவே இது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைபெற்ற கூட்டம். தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் இல்லை. தமிழ்நாடு அரசை பொறுத்தவரை பேருந்து கட்டண உயர்வு இல்லை என்பதில் தெளிவாக உள்ளோம். பொதுமக்கள் மீது கட்டண உயர்வு சுமையை ஏற்றக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு டீசல் விலையை உயர்த்திய போது கூட, தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை.
இப்போது சர்வதேச அளவில் டீசல் விலை குறைந்தாலும், இந்தியாவில் டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கவில்லை. இருந்தாலும் முதலமைச்சரின் அறிவுரைப்படி அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு ஏதுமின்றி பேருந்துகள் இயங்கும். ஏற்கனவே எதிர்க்கட்சியினர் மின்சார கட்டணம் உயரப்போகிறது என தொடர்ச்சியாக பேசி வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்று திட்டவட்டமான அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் கட்டண உயர்வு என்பது இருக்காது என்பதை முதல்வர் அறிவுறுத்தல்படி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.