சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு மே 30ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 7 ந் தேதி தொடங்கி இன்று (மே 27 ந் தேதி) வரை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்தனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை 2,25,705 விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,08,619 மாணவிகளும், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,84,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மே 29 ந் தேதி அன்று அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்படும். பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 30 ந் தேதி அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்படும். கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்படும்.
மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும். மே 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் பிளஸ் டூ துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் மீண்டும் 30.5.2025 அன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், அந்தமான் – நிகோபார் தமிழ் மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், பாதுகாப்புப் படை வீரர்களின் வாரிசுகள்) ஜூன் 2 மற்றும் 3 ந் தேதிகளில் நடைபெறும். ஜூன் 4-ந் தேதி முதல் ஜூன் 14 ந் தேதி வரை பொதுக் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 30 ந் தேதி வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.