சென்னை: அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கி திமுக சார்பில் வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை தேர்தல் திருவிழா போல நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். திமுகவில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர்.
இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு ‘ஓரணியில் தமிழ்நாடு’ என உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும் என்று கடந்த 1ம் தேதி மதுரையில் நடத்த திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி திமுகவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை திமுக மேற்கொள்ள உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்காக திமுகவினர் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை தொடங்க உள்ளனர். அடுத்த வாரம் முதல் மாவட்டம் – பகுதி – நகர – ஒன்றிய – பேரூர் – வட்ட – கிளை என்று அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதனை தேர்தல் திருவிழா போல நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கையை வெற்றிகரமாக நடத்தும் வகையில், அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மண்டல பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். தொடர்ந்து தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பின் போது புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திமுக அரசின் திட்டங்கள், திமுக சார்பில் மக்கள் பிரச்னைகளுக்காக நடத்தப்பட்டுள்ள போராட்டங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணி மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்து, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள், அவர்களில் எவ்வளவு பேர் திமுக உறுப்பினர்களாக உள்ளனர், என்பது போன்ற விவரங்களை சேகரித்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை திமுகவினர் முன்னெடுக்க உள்ளனர். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி அளவிலான ஆலோசனைக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். இந்த உறுப்பினர் சேர்க்கை பணியில் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை அனைத்து திமுகவினரும் களமிறங்க உள்ளனர்.
* 3வது நாளாக தொகுதி வாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை 6 தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், 3வது நாளாக நேற்று இரவு ஸ்ரீரங்கம், குன்னம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட 3 தொகுதி நிர்வாகிகளுடனான சந்திப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார்.
இதில் 3 தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அந்தந்த தொகுதிகளை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து பேசி அவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், வெற்றி வாய்ப்பு தொகுதிகளில் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் கருத்துகளை கேட்டார். சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது அவர் அறிவுரை வழங்கினார்.