*விழாவில் சபாநாயகர் அப்பாவு பேச்சு
திசையன்விளை : மாணவர்களின் நலன்கருதி திசையன்விளையில் புதிதாக கடல் சார் தொழில் படிப்புகளுடன் கூடிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அடுத்த மாதம் முதல் செயல்படும் என்று திசையன்விளை அருகே நடந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சி வாழைத்தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் 200 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி முன்னிலை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். விழாவில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அவர் பேசுகையில், ‘ திசையன்விளை பகுதியில் நீதிமன்றம் வேண்டுமென்று நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். தற்காலிகமாக மிக விரைவிலேயே வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நீதிமன்றம் செயல்படும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
நீதிமன்ற நிரந்தர கட்டிடம் திசையன்விளை காவல் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.
திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் கப்பலில் பணி செய்வதற்கு சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். திசையன்விளையில் உள்ள ஒரு அரசு ஐடிஐ தொழில் பயிற்சி கூடம் தொடங்குவதற்கு நடந்து முடிந்த மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐடிஐ தொழிற்பயிற்சி கூடம் தொடங்கப்பட உள்ளது.
இடையன்குடியில் உள்ள தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.குட்டம் ஊராட்சியில் கடைசி பகுதியாக இருக்கக்கூடிய பெரியதாழையின் தென்பகுதியான மிக்கேல்நகர், ஜார்ஜ் நகர் பகுதியில் 5 ஏக்கரில் ஐடிஐ கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் ஓரிரு மாதங்களுக்குள் தொடங்கப்படும்.
அடுத்த கல்வியாண்டில் புதிய கட்டிடத்தில் ஐடிஐ செயல்படும். அரசு தொழில் பயிற்சி கூடத்தில் குறிப்பாக நான்கு பாடப்பிரிவுகளில் கடல் சார் தொழிலுக்கு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறும் வகையில் இரண்டு கடல் சார் பாடப்பிரிவுகளுடன் ஐடிஐ செயல்பட உள்ளது.
லட்சக்கணக்கில் செலவு செய்து பெறப்படும் சான்றிதழ்களை ஏழை மாணவர்கள் எளிதாக பெரும் வண்ணம் அரசு தொழில் பயிற்சி கூடத்தை அமைத்துக் கொடுத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி, ஒன்றிய கவுன்சிலர் ஜெஸி, முன்னாள் கவுன்சிலர் ராஜன், வேளாண்மை துணை இயக்குநர் உமா மகேஸ்வரி, உதவி இயக்குநர் மோகன், விற்பனைக்குழு செயலாளர் எழில், கண்காணிப்பாளர் சரவணமுத்து, உதவி அலுவலர் அஜிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.