பந்தலூர் : நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பந்தலூரில் 137 மிமீ, சேரம்பாடியில் 139 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மின்கம்பிகள் துண்டித்தும் பாதிப்புகள் ஏற்பட்டது. சேரம்பாடி நாயக்கன்சோலை பகுதியில் கணபதி என்பவரின் வீடு அருகில் மண் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டது.
கல்லிச்சால் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மாவட்ட வெள்ள நிவாரண கண்காணிப்பு அலுவலர் லலிதா நேற்று பொன்னானி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொன்னானி ஆற்றோரத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கன மழைக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் அவர்களை தங்க வைப்பதற்கு பொன்னானி அரசு பழங்குடியினர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம் ஆகியவற்றை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடலூர் ஆர்டிஓ சங்கீதா, பந்தலூர் தாசில்தார் செந்தில்குமார், வழங்கல் அலுவலர் பொன்னரசு, ஆர்ஐ வாசுதேவன் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
மேலும் பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அதிநவீன உபகரணங்களுடன் தமிழ்நாடு தீயனைப்பு அவசர கால மீட்பு ஊர்தி தீயணைப்பு அலுவலர் வேலுச்சாமி, மாவட்ட உதவி அலுவலர் கலையரசன், நிலைய அலுவலர் மோகன் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் மற்றும் தமிழ்நாடு மீட்பு படையினர் 20 நபர்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் காற்றுடன் கூடிய கனமழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.