நெல்லை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் பொதுமேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மண்டல பொதுச் செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார்.
சிஐடியூ மண்டல செயலாளர் ஜோதி, பணியாளர் சம்மேளனம் சந்தானம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சிஐடியு பாலசுப்பிரமணியன், பெருமாள், ஏஐடியுசி வெங்கடேசன், ஜெயகுமார், பணியாளர் சம்மேளனம் பேச்சிமுத்து, உத்திரம் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளை 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரக்கைகளை பேசி விரைவாக முடிக்க வேண்டும். பிற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், முழுமையாக ஒப்பந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு சமமாக அகவிலைப்படி வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்றவுடன் பண பலன்களை ஓய்வூதியத்துடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். 2003 ஏப்.1க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வாரிசு வேலை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அடிப்படையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.