சென்னை: தேசிய விண்வெளி தினத்தின் முதலாமாண்டை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம் மற்றும் மாதிரி கண்காட்சி பொருள் தயாரித்தல் ஆகிய போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. இதில் சென்னையைச் சேர்ந்த பள்ளிகளில் இருந்து 361 மாணவர்கள் கலந்து கொண்டதில் 81 பேர் வெற்றி பெற்றனர்.
இவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையர் ஆபிரகாம் , அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘‘அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும். செல்போன், கணினி போன்ற உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கற்க வேண்டும். பகுத்தறிவு அடிப்படையில் வளர்வது தான் அறிவு. தமிழகத்தில் ஆரம்பக் கல்விக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். உயர்கல்விக்கு வித்திட்டவர் கலைஞர் கருணாநிதி. அந்தவரிசையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நான் முதல்வன், தமிழ் புதல்வன் உட்பட பல்வேறு திட்டங்களை கல்வித் துறைக்கு அளித்து வருகிறார்.
மேலும், தொழில் துறையில் வெளிநாடுகளில் இருக்கும் தொழில்நுட்பங்களை இங்கு கொண்டு வந்து மேம்படுத்துவதற்காக தான் தற்போது வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்’’ என்றார்.