விழுப்புரம்: அரசின் திட்டங்கள் பற்றி தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று மாலை, நாளை மறுநாள் ஆகிய 3 தினங்களில் திண்டிவனம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசால் வழங்கப்படும். கலைஞர் உரிமைத்தொகைகான சிறப்பு முகாம் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை மர்மநபர்கள் பரப்பினர்.
இத்தகைய தகவலினால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி கடுமையான எச்சரிக்கையை செய்தி வாயிலாக அறிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முகாம் நடத்தப்படுவதாக பரவும் தகவலை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் பரவும் தகவலை உண்மை என நம்பி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகங்களுக்கு வர வேண்டாம்.
அரசின் நலத் திட்டங்கள் தொடர்பாக முகாம் நடத்தப்படுவதாக இருந்தால் உரிய அறிவிப்பு வெளியிடப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பெண்கள் குவிந்து வருவதால் அரசு அறிவுறுத்திவருகிறது. மேலும், முகாம் நடைபெறுவதாக பரப்பப்பட்ட வதந்தியால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பெண்கள் வந்த வண்ணம் உள்ளனர். இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.