சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உத்தரவிட்டுள்ளார். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக உள்துறை மற்றும் சுகாதாரத்துறை மூத்த அலுவலர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து மருத்துவ கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சங்குமணி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் தற்போது 2,990 காவலர்கள் பாதுகாப்பில் உள்ள நிலையில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள புறங்காவல் நிலையங்களில் தற்போது 3 காவலர்கள் உள்ளனர்.
அவர்களின் எண்ணிக்கையை ஒரு ஷிப்டிற்கு 3 பேர் வீதம் 9 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இனி ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும் 100 முதல் 160 சிசிடிவிகள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் இயக்கப்பட்டு கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்க விடுதிகளில் 24 மணிநேரமும் காவலர்கள் இருக்க வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி உத்தரவிட்டுள்ளார்.