*வாகன ஓட்டிகள் அவதி
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில், ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பாலம் கட்டுமான பணியால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக உள்ளது. இந்த சாலை மார்க்கமாக வடமாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள், கார்கள், பேருந்துகள் என தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தமிழகத்திற்கு வருகிறது.
அதேபோல், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக தான் செல்கின்றன. இவ்வாறு போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில், கிராமப்புறங்களில் இருந்து வரும் சாலை சந்திப்பு இடங்களில அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுத்திட உயர்மட்ட பாலங்கள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்து ஏற்படும் பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தன. அதன்படி, கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையில் சூளகிரி வரையில் 4 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இந்த பணிகள் நடந்து வந்ததால் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக 60 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலையை வழக்கமாக ஒரு மணி நேரத்தில் வாகனங்கள் கடக்கும் நிலையில், தற்போது ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரையிலும் பிடிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மேலுமலை, சாமல்பள்ளம் ஆகிய 2 இடங்களில் கட்டப்பட்ட பாலங்கள் முடிக்கப்பட்டு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்தன. ஆனால், இந்த சாலையில் போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும், சிறிய வாகனங்கள் செல்லும் வகையிலும் 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன.
பெரிய உயர்மட்ட பாலமாக அமைய பெறும் இந்த பால கட்டுமான பணிகளால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி முன் அமையபெறும் பாலப்பணிகள் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக நடந்து வருகிறது. இதனால் அவசர, அவசிய தேவைக்கு இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
இந்த மேம்பாலம் அமையப்பெறும் இடத்தின் இருபுறமும், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. குறிப்பாக வார இறுதி நாட்களில் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வரும் வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராமல் சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை கால தாமதமாகிறது.
இதனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்துகளை இயக்க முடியாமல் அதன் ஓட்டுனர்களும், குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பாலம் அமைக்கும் பணியினை போர்கால அடிப்படையில் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.