வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வெளியே மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளதால், அதை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வேலூர் மாவட்டமின்றி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் பல்ேவறு மருத்துவப்பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை உடனுக்கு உடன் மருத்துவ பணியாளர்கள் சேகரிக்கிக்கின்றனர். பின்னர் அந்த மருத்துவ கழிவுகளை தனியார் நிறுவனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படுகிறது.
இதற்கிடையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சடலங்கள் பிரேத பரிசோதனை கூடம் பகுதியில் வெளியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளது. அந்த மருத்துவக்கழிவுகள் அகற்றாமல் உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நாய்கள் அந்த மருத்துவ கழிவுகளை கவ்வி வெளியே சிதறிவிடுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.