சென்னை: அரசு கள்ளர் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு கள்ளர் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பல வருடங்களாக நிரப்பப்படாமலே இருப்பதால் அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வின் மூலமாக நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு அரசு கள்ளர் பள்ளிகளில் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக புகாரும் எழுந்திருக்கிறது. எனவே, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கல்வி கற்பிப்பதில் சுணக்கம் என பல்வேறு காரணங்களால் அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அப்பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.