*கலெக்டரிடம் மாதர் சங்கத்தினர் மனு
திருப்பூர் : கானூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பாடப்பிரிவுகள் ஆய்வக வசதியுடன் செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் மனு கொடுத்தனர்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளத்தினர் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அவினாசி ஊராட்சி ஒன்றியம் கானூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 301 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயில்வதற்காக சின்னகானுர், பெரிய கானுர், அல்லப்பாளையம், கோனார்பாளையம், திம்மநாயக்கன்பாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், கானூர்புதூர், ருத்ரியாம்பாளையம் ஆகிய 14 தொடக்கப்பள்ளிகளில் இருந்து 6ம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயில வருகிறார்கள்.
ஆலத்தூர் நடுநிலைப்பள்ளியில் இருந்து 9ம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயில வருகிறார்கள். இந்த 14 பள்ளிகளுக்கும் மையப்பகுதியாக கானூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது அந்த பள்ளியில் 11ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பயாலஜி பாடப்பரிவு மட்டுமே உள்ளது. இதர பாடப்பிரிவுகள் எதுவும் இல்லை. இதனால் கானூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள கருவலுர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இதர பாடப்பிரிவுகளை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், பல்வேறு கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் சுமார் 12 கி.மீ வரை கருவலுர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கானூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பாடப்பிரிவுகள், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வக வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அவினாசி ஊராட்சி ஒன்றியம் ராமநாதபுரம் தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த மனு: திருப்பூர் மாவட்டத்தில் தலித் மக்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி கண்டிசன் நிலங்களை மீட்டு சாதிப்பாகுபாடின்றி அனைத்து சமூகங்களை சேர்ந்த வீடில்லாத ஏழை மக்களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் கொடுத்த மனு: கடந்த 2011-2012ம் கல்வி ஆண்டு முதல் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ.12 ஆயிரத்து 500 சம்பளத்தில் பணியாற்றி வருகிறார்கள். குறைவான ஊதியம் என்றாலும் அரசு மாணவர் நலன் கருதி பணியாற்றி வருகிறோம். தமிழக முதல்வர் சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். அதன்படி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த மனு: ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டியன்கிணறு பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சாலை வசதி இல்லை. இந்நிலையில், கருங்காட்டுப்புதுர், ஏ.வி.எஸ். கார்டன் நாடார் காலனி, கொண்டத்துக்காளியம்மன் நகர், வைஷ்ணவி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் இறப்பு ஏற்பட்டால் மேற்படி அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்வார்கள். இந்த சுடுகாட்டிற்கு செல்லும் சாலை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் சேதமடைந்து உள்ளது. எனவே ஆதிதிராவிடர் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் வசதிக்காக சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
பெருமாநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனு: எங்களது பகுதியில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படும். எனவே திருமண மண்டபம் அமைக்கும் பணியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் 41 வது வார்டு பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் சாக்கடை கழிவுநீரை நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் பலவஞ்சிபாளையம் ரோடு குறவன்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு மனுக்கள் கொடுத்தனர். அதிமுக நிர்வாகிகள் சிலர் கொடுத்த மனுவில் தங்களை குறித்து அவதூறு பரப்பி வருகிற சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.