பல்லியா: உத்தரப்பிரதேசத்தில் மின்சாரம் தடை பட்டதால் அரசு சுகாதார மையத்தில் நான்கு பெண்களுக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் பெரார்பாரியில் உள்ள சுகாதார மையத்தில் பிரசவத்துக்காக 4 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால் சுகாதார மையத்தில் மின்சார தடை காரணமாக மருத்துவர்கள் செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் நான்கு பேருக்கும் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், மின்மாற்றி எரிந்ததால் 3 நாட்களாக மருத்துவமனையில் மின்சாரம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சுகாதார மையத்தில் ஜெனரேட்டர் மற்றும் டீசல் இருந்தபோதிலும் செல்போன் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகின்றது. விசாரணை அறிக்கைக்கு பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை மருத்துவ அதிகாரி உறுதியளித்துள்ளார்.