புவனேஸ்வர்: ஒடிசாவில் திடீர் சோதனை நடத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அரசு இன்ஜினியர் வீட்டில் இருந்த பணத்தை தூக்கி வெளியே வீசிய காட்சிகள் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநில ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை பொறியாளர் பைகுந்த நாத் சாரங்கி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகார் அடிப்படையில் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்குல், புவனேஸ்வர் மற்றும் பிபிலி (புரி) ஆகிய இடங்களில் உள்ள 9 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் ரூ.2.1 கோடி பணத்தை விஜிலென்ஸ் துறை மீட்டுள்ளது.
விஜிலென்ஸ் திடீரென சோதனை நடத்த வந்ததால் அதிர்ச்சி அடைந்த அரசு இன்ஜினியர் தனது புவனேஸ்வர் அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னல் வழியாக ரூ.500 நோட்டுகளின் மூட்டைகளை வீசியதால் அந்த பகுதி முழுவதும் நோட்டுக்களாக சிதறியது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து பண மூட்டைகளை மீட்டனர். இந்தவீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அங்குலில் உள்ள சாரங்கியின் வீட்டில் ரூ.1.1 கோடியும், புவனேஸ்வர் குடியிருப்பில் இருந்து ரூ.1 கோடியும் கண்டுபிடிக்கப்பட்டன. பணத்தை எண்ணும் பணி நடக்கிறது.