சென்னை: திருச்சியில் அமையவுள்ள நூலகத்திற்கு ‘காமராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.06.2024 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விதி எண்.110 கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், செங்குளம் கிராமம், பிளாக்-12. நகரளவை எண்.4 மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம், கோ.அபிஷேகபுரம் கிராமம் 1.85.17 ஹெக்டேர் இடத்தில் 18333 சதுர மீட்டர் (1.97,337 சதுரடி) அளவில் ரூ.290.00 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் மாபெரும் நூலகம் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரில், 01.04.2025 அன்று, சட்டமன்றப் பேரவையில் நடைப்பெற்ற நூலகங்கள் பற்றிய விவாதத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். ஏனையவற்றுடன், தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, இலட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை ஏற்று காவிரிக் கரையில் அமைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1.97,337 சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் உலகத்தரத்தில் அமைக்கப்படும் மாபெரும் நூலகத்திற்கு “காமராசர் அறிவுலகம்” என்ற பெயரினைச் சூட்டலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.