திங்கள்சந்தை : குண்டும் குழியுமாக கிடக்கும் சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி பஸ் ஸ்டாப் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய நிறுத்தங்களில் சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி பஸ் நிறுத்தமும் ஒன்று.
இந்த பஸ் நிறுத்தத்தில் தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மட்டும் இன்றி, அப்பகுதியில் உள்ள ஐயப்பா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தனியார் மகளிர் இன்ஜினியரிங் கல்லூரி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவைகளில் பயிலும் மாணவ மாணவியரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் இந்த பஸ் நிறுத்தம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். குறிப்பாக மாலை வேளைகளில் திங்கள்சந்தை, தக்கலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மாணவ மாணவியர் இந்த பஸ் நிறுத்தத்தில் அதிக அளவில் குவிகின்றனர். இதனால் மாணவர்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தனியாக அணுகு சாலை அமைத்து பஸ் நிறுத்தத்தை அமைத்துள்ளனர். ஆனால் சமீப காலமாக இந்த அணுகு சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் கிடைக்கிறது.
அதேபோன்று தனியார் ஓட்டலுக்கு வரும் ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்களும் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அணுகு சாலை வழியாக வந்து பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி செல்ல டிரைவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் மாணவ மாணவியர் குறிப்பிட்ட அந்த சாலையை ஓடி கடந்து தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் பஸ்ஸில் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி பஸ் ஸ்டாப் அணுகு சாலையை சீரமைக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.