*பெண் பயணிகள் கடும் அவதி
குமாரபுரம் : பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்து பெண்களைக் கண்டால் நிறுத்தாமல் சென்று விடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்த புகார் உண்மை என தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மீது போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் திட்டுவிளை பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தக்கலை அருகே வெள்ளியோடு சந்திப்பு பகுதியை கடந்து சென்றது.
அப்போது பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் பேருந்தை நிறுத்த சொல்லி செய்கை செய்து காண்பித்துள்ளனர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, பெண்கள் வேறு வழியின்றி அவர்கள் கையில் வைத்திருந்த சுமைகளுடன் பேருந்தை பின் தொடர்ந்து ஓடினர். இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.