திருவாரூர்: திருவாரூர் மாவட்ட எல்லையான கீரனூர் செக்போஸ்ட்டில் பேரளம் போலீசார் நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.இதில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரை சேர்ந்த முகம்மது யூனுஸ்(40) என்பவர் வைத்திருந்த கைப்பையில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் ரூ.20 லட்சம் இருந்தது.
பணம் குறித்து அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர் விசாரணையில், வெளிநாடுகளில் இருந்து வந்த ஹவாலா பணத்தை திருவாரூரை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பெற்று மயிலாடுதுறையில் உள்ள சிலருக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன் முகம்மது யூனுஸை போலீசார் கைது செய்து திருவாரூர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.