*காயமின்றி உயிர் தப்பிய பயணிகள்
தண்டராம்பட்டு : திருவண்ணாமலை பணிமனையில் இருந்து தற்காலிக ஊழியர் ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் நடத்துனர் ஏழுமலை ஆகிய இருவரும் நேற்று காலை சைதாப்பேட்டை போந்தை வழியாக திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து இயக்கினர்.
மாலை திருவண்ணாமலையில் இருந்து பெருங்குளத்தூருக்கு சென்று விட்டு மீண்டும் திருவண்ணாமலை நோக்கி செல்லும்போது வாணாபுரம் கோழி பண்ணை செல்லும் சாலையில் எதிரே அரசு விரைவு பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது அரசு டவுன் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீட்டின் மீது மோதியது.
அப்போது ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்தனர். மேலும் அப்பகுதி மக்களும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த 9 ஆண்கள், 15 பெண்கள் காயம் இன்றி உயிர்த்தப்பினர். மேலும் வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்ஐ வேலு தலைமையில் விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பேருந்து வாணாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.