*டிரைவர்கள் உள்பட 10 பேர் காயம்
தர்மபுரி : தர்மபுரி -சேலம் மெயின் ரோட்டில் அரசு பஸ் – டிராக்டர் மோதிய விபத்தில் பஸ்சில் வந்த பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் டிராக்டர் டிரைவர் உள்பட 10பேர் காயமடைந்தனர். தர்மபுரி புறநகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்றது. இந்த பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் நாராயணன் (58) பஸ்சை ஒட்டினார், கண்டக்டர் மாதேசன் (52) பயணிகளிடம் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.
பஸ் தர்மபுரி -சேலம் மெயின்ரோட்டில் பச்சியம்மன் கோயில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, தனியார் மருத்துவமனை பஸ் ஸ்டாப் முன்பு ராகி தட்டை ஏற்றிவந்த டிராக்டர் சாலையை கடந்தது. அப்போது சேலம் வந்த பஸ் டிராக்டர் மீது மோதியது.
தகவல் அறிந்த, தர்மபுரி டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த பயணிகள் 7பேர், பஸ் டிரைவர் நாராயணன், கண்டக்டர் மாதேசன், டிராக்டர் டிரைவர் கார்த்திகேயன் ஆகிய 10பேரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. டிராக்டரின் முன்பகுதி துண்டாகி முழுமையாக சேதம் அடைந்தது. இஞ்ஜினில் இருந்த ஆயில் சாலையில் ஓடியது. இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.