Monday, April 22, 2024
Home » ஒட்டுக் கட்டினால் உயர் விளைச்சல்… காய்க்காத நெல்லியும் காசு குவிக்கும்!

ஒட்டுக் கட்டினால் உயர் விளைச்சல்… காய்க்காத நெல்லியும் காசு குவிக்கும்!

by Porselvi

நெல்லியில் பணாராசி பி.எஸ்.ஆர் – 1, கிருஷ்ணா, காஞ்சன், சக்கியா, என்.ஏ – 7 மற்றும் என்.ஏ – 10 போன்ற உயர் மகசூல் தரும் ரகங்கள் இருக்கின்றன. இந்த ரகங்களை விவசாயிகள் ஒட்டுக் கன்றுகளாக தேர்வு செய்து நடவு செய்கிறார்கள். கன்றுகளை நடும்போது ஒட்டுப்பகுதி மண்ணுக்குள் மூழ்குமாறு நடவு செய்யாமல் வெளியே தெரியுமாறு நடுவது அவசியம். தவறும் பட்சத்திலும், சரியான பாராமரிப்பு இல்லாத காரணத்தாலும் ஒட்டுப் பகுதியில் இருந்து வளர வேண்டிய வளர்ச்சி தடைப்பட்டு அதற்குக் கீழ் உள்ள வேர்ப்பகுதி தண்டிலிருந்து பெரிய தண்டுகளாக வளரும். பின்னர் காய்க்கும் பருவத்தில் அவ்வாறு வளர்ந்த மரங்கள் சரியாக காய்ப்பதும் இல்லை. அப்படியே அது காய்த்தாலும் வேர்ப்பகுதி தண்டிலிருந்து வளர்ந்த பகுதிகளிலிருந்து காய்ப்பதால் காய்கள் பட்டாணி அளவு தடிமனில் ஒல்லிக்காய்களாக இருக்கும். அவை சந்தையில் விலை போவதில்லை. இதனால் விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்படும். இவ்வாறு காய்க்காத மரங்கள் அல்லது சிறிய அளவில் ஒல்லிக்காய்களாக காய்க்கும் மரங்களை அந்தந்த வயல் வெளியிலேயே உயர் மகசூல் தரும் ஒட்டுரக மரங்களாக மாற்றலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

அம்மாதிரியான மரங்களை ஜூன்-ஜூலை மாதத்தில், தூரில் இருந்து இரண்டு முதல் மூன்று அடி உயரத்தில் வெட்டிவிட வேண்டும். பின்னர் வெட்டிவிட்ட மரங்களுக்கு 2 முதல் 3 முறை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது. இரண்டு முதல் மூன்று மாதத்தில் வெட்டி விடப்பட்ட பகுதியில் இருந்து ஏராளமான தளிர்கள் துளிர்த்து பென்சில் தடிமன் அளவுக்கு வளரும். அதிலிருந்து மூன்று அல்லது நான்கு தளிர்களை மட்டும் ஒவ்வொரு தளிருக்கும் சரிசமமான இடைவெளி இருக்குமாறு தேர்வு செய்து அவற்றில் உயர் மகசூல் தரும் மரத்தின் தளிரில் இருந்து மொட்டுகளை எடுத்து மொட்டு ஒட்டு முறைப்படி ஒட்டச் செய்து ஒட்டு மரமாக மாற்றலாம்.தேர்வு செய்யப்பட்ட பென்சில் தடிமன் உள்ள தண்டில் 1.5 செ.மீ நீளம் 0.75 செ.மீ அகலம் என்ற அளவில் அதன் பட்டையை ஒட்டு செய்ய பயன்படுத்தப்படும் சுத்தியைக் கொண்டு கவனமாக வெட்டி எடுக்க வேண்டும். அதே அளவில் அதே அளவு தடிமன் கொண்ட உயர் ரகத்தின் தண்டிலிருந்து அதன் இலையை நீக்கியபின் ஒரு மொட்டை எடுத்து பட்டை நீக்கிய தண்டில் அதே இடத்தில் வைத்து பிளாஸ்டிக் கீற்று கொண்டு மொட்டுப் பகுதி மறையாதபடி நன்கு அழுத்தமாக கட்ட வேண்டும்.

இவ்வாறு மூன்று அல்லது நான்கு தண்டுகளிலும் மொட்டு ஒட்டு முறைப்படி ஒட்டுக் கட்ட வேண்டும். பின்னர் மற்ற தளிர்கள் அனைத்தையும் வெட்டி நீக்க வேண்டும். இவ்வாறு ஒட்டுக் கட்டிய மரத்திற்கு 2 முதல் 3 நாட்களுக்கொரு முறை, முதல் இரண்டு வாரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பிறகு 15 நாட்களுக்கு ஒருமுறை, 6 மாதங்களுக்கு நீர்ப் பாய்ச்ச வேண்டும். ஒட்டுக் கட்டப்பட்ட மொட்டிலிருந்து வரும் தளிரைத் தவிர மற்ற தளிர்களை அவ்வப்போது நீக்குவது மிகவும் அவசியமாகும். அதன்மூலம் ஒட்டுக் கட்டப்பட்ட மொட்டிலிருந்து விரைவாக தளிர்விட ஏதுவாக இருக்கும்.இவ்வாறு ஒட்டுக் கட்டிய மொட்டிலிருந்து வளரும் தளிரை ஒட்டுக் கட்டிய மூன்றாவது மாதத்தில், தளிரின் நுனிப் பகுதியிலிருந்து ஒன்று முதல் ஒன்றரை அடி நீளத்திற்கு வெட்டிவிட வேண்டும். பின்னர் இதுபோல 2 முதல் 3 மாதங்களுக்கு ஒருமுறை வெட்டி விட வேண்டும். இவ்வாறு வெட்டி விடுவதன் மூலம் தண்டுப்பகுதி நன்கு தடித்து, விரைவில் மரத்தின் வெட்டுவாய்ப் பகுதியும் தண்டுப்பகுதியும் ஒரே அளவில் வளர்ந்து விடும். அதன் மூலம் வேகமாக காற்று வீசும்போது ஒட்டப்பட்ட கிளைகள் ஒடிந்துவிடாமல் பாதுகாக்கலாம். இவ்வாறு மொட்டு ஒட்டு முறைப்படி ஒட்டுக் கட்டப்பட்ட மரம் ஆறு மாதங்களிலேயே காய்ப்பிற்கு வரும். ஆனால் அவற்றைக் காய்க்க விடாமல், மரத்தை நன்கு வளர்த்து ஒரு வருடம் கழித்த பின் காய்க்க விட வேண்டும்.இவ்வாறு காய்க்காத அல்லது ஒல்லியாக காய்க்கும் நெல்லி மரங்களையும் காய்க்கச் செய்து ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள அனைத்து நெல்லி மரங்களும் வருமானம் தந்து வளம் தரும் வகையில் மாற்றலாம்.
– மகேஷ்வரன்
வேளாண்மை அலுவலர்,
விதை பரிசோதனை ஆய்வகம், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 94424 89728.

You may also like

Leave a Comment

16 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi