பகுதி 2
ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்.என்று சொல்லி, “என்னால் (மனிதன்) எதுவும் இல்லை ஸ்வாமி… உன்னால்தான் அனைத்தும். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களும் உன்னுடையது’’ என்று சொல்லி, இறைவனிடத்தில் சரணாகதி ஆகவேண்டும். இறைவனிடத்தில் பக்தி வேண்டும். அதற்கு ஒன்பது படிகளை கடந்து செல்ல வேண்டும். அந்த ஒன்பது படிகள்தான், மேலே கூறியவை (ஸ்ரவணம்…கீர்த்தனம்…ஸ்மரணம்..) ஆகும். என்று சென்ற இதழில் கண்டோம் அல்லவா, இனி… அந்த ஒன்பது நிலைகளையும் ஒவ்வொன்றாக விரிவாக காணலாம்.
ஸ்ரவணம்
முதல் படியான ஸ்ரவணத்தை பற்றி எடுத்துக் கொண்டால், ஸ்ரவணம் என்பது என்ன? காதில் கேட்பது (Listening to the ear). எதைக் கேட்பது? பகவானின் சரித்திரக் கதைகளை நித்யம் கேட்பது. கன்னடத்தில் ஒரு சொல்லாடல் உண்டு, “கேளு..கேளு..கெளத்தாகி..இரு’’ அதாவது “கேட்க வேண்டும்… கேட்க வேண்டும்… தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்’’ என்று சொல்லுவார்கள்.
சரி… இந்த ஸ்ரவணத்தை எப்போது நிறுத்த வேண்டும்? வாழ் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? என்று கேட்டால், ஸ்ரவணத்தை ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்திக் கொள்ளலாம். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. பல ஆண்டுக் காலம் ஸ்ரவணமாக கேட்டு வந்த பாகவதத்தையோ அல்லது புராணங்களையோ எப்போது வாய் வழியாக சொல்ல ஆரம்பிக்கிறோமோ அப்போது கேட்பதை நிறுத்திக்கொள்ளலாம். இன்னும் விரிவாக சொல்லவேண்டும் என்றால்;
குழாய் அடியில் ஒரு குடத்தை வைக்கிறோம். தண்ணீர் அதில் நிரம்புகிறது. எது வரை நாம் குடத்தை குழாய் அடியில் வைப்போம்? தண்ணீர் அதில் நிரம்பி வழியும் வரையில் நாம் குழாய் அடியில் குடத்தை வைப்போம். வழிந்த பின் குடத்தை எடுத்து விடுவோம். அதுபோல, காதில் கேட்ட பாகவதத்தை நம்மை அறியாமல் வாயில் உச்சரித்துக் கொண்டே இருந்தோமே
யானால், அப்போது கேட்பதை அதாவது ஸ்ரவணத்தை நிறுத்திக் கொள்ளலாம்.
வேத வேதாந்தங்கள் சாமானிய மனிதனுக்கு புரியாது. ஆனால், “Story Telling’’ என்று சொல்லக்கூடிய கதை வடிவமாக சொன்னால், குழந்தைகள்கூட புரிந்து கொள்கிறார்கள். ஆக, நாம் அனைவரும் பகவானின் குழந்தைகள். குழந்தைகளான நமக்காக எளிய வடிவில், புரியும்படியாக புராணக் கதைகளாக பகவான் உருவாக்கியுள்ளார்.
“மமைவாம்ஸோ ஜீவ – லோகே ஜீவ – பூதஸ் சனாதன:’’
(Mamaivamso Jiva-Loke Jivabhutah Sanatanah)
நம் மீது வைத்துள்ள கருணையால், தனது (பகவான்) தத்துவங்களை கதையின் ரூபமாக நமக்காக சொல்லி வைத்திருக்கிறான். இந்த புராதனக் கதைகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனைப் புராதனக் கதைகள் என்று கூறு கிறார்கள். எத்தனை புராணக் கதைகள் இருக்கின்றன? 18 புராண கதைகள் இருக்கின்றன. இந்த 18 புராணங்களில் கடைசியானது “ஸ்ரீமத் பாகவதம்’’ ஆகும்.
இந்த பாகவதம், ஸ்ரீவேதவியாசர் முக கமலத்தில் இருந்து வெளிவந்த கட்ட கடைசி புராணம், கிரந்த ரத்தினமாகும்.
(மீதம் அடுத்த இதழில்…)
ஜி.ராகவேந்திரன்