Thursday, July 18, 2024
Home » திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்

திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்

by Lavanya

‘‘எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு இருக்குப்பா. அது செய்யற மாயாஜாலம்தான் இதெல்லாம்’’ என்று நேரத்தின் மகிமையை புரிந்தோ, புரியாமலோ பேசுகிறோம். ஒரே தொழிலைச் செய்கிற ஒருவரை ஓஹோவென்று முன்னுக்கு வரச் செய்வதும், அதே தொழிலைச் செய்கிற வேறொருவரை நொடித்துப் போகச் செய்வதும் இந்த நேரம்தான்! இப்படியொரு விஷயம் இருப்பதை காலாகாலமாக அனிச்சையாகப் பேசி வருகிறோம். ‘‘பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது’’ என்று பெண்ணை விட புதனுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள். முக்கியமான வேலையாக வெளியில் கிளம்பும்போது கண்கள் தானாகவே காலண்டரில் நல்ல நேரம் தேடும். நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வேலையில் சேரும்போது எமோஷனல் இல்லாத பிரமோஷன் அடுத்தடுத்து கிடைக்கும். ‘‘பர்மா தேக்கு, கிரானைட் போட்டு பெரிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தாரு. ஆனா, நாலாம் நாளே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு… பாவம்’’ என்கிற பேச்சை எங்கேனும் கேட்க நேர்ந்தால், அங்கே நேரம் விளையாடி இருக்கிறது என்று அர்த்தம். ‘‘ஆறு மாசத்துக்கு முன்னாடியே முன்பணம் கொடுத்து, ஃபேன்ஸி நம்பர் வாங்கி பதிவு செய்து எடுத்த வண்டி அஞ்சாம் நாளே ஆக்சிடென்ட் ஆகுது’’ என்கிற நிகழ்வுக்குக் காரணம் என்ன?எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய நாள் என்று ஒன்று உண்டு. அந்த நேரத்து திதி… நட்சத்திரம்… யோகம்… என்று எல்லாமுமே அந்த நிகழ்வை பாதிக்கச் செய்கிறது.

‘‘எனக்கு இதுல ஒண்ணும் ஈடுபாடு இல்லை தம்பி. இருந்தாலும் எல்லோரும் சொல்றாங்களேன்னுதான் வந்தேன். இன்னிய தேதிக்கு இருபதாயிரம் ஓட்டு வித்தியாசத்துல ஜெயிப்பேன். அதுல எனக்கு திருப்தியில்லை. எதிரிக்கு டெபாசிட் போகணும். நானும் ஜெயிச்சு எம்.எல்.ஏவா உட்கார்ந்திருக்கறதுல விருப்பமில்லை. ஜெயிச்ச கையோட அமைச்சராக பதவி ஏற்கணும். இத்தனை ஆசையும் நிறைவேறணும்னா எந்த நேரத்துல நாமினேஷன் தாக்கல் பண்ணணும்னு பார்த்துச் சொல்லுங்க தம்பி’’ என்று கடவுள் நம்பிக்கையற்ற ஒரு அரசியல் பிரமுகர் என்னிடம் கேட்டார். கடவுளை நம்பாதவர்கள்கூட நேரத்தை நம்ப நேர்கிறது. உலக நிகழ்வுகள், செயல்கள், சம்பவங்கள் எல்லாமே பொதுவானது. ஆனால் அவற்றை எதிர்கொள்ளும் நேரம் முக்கியமானது. தெய்வ காரியங்கள் மற்றும் பிரார்த்தனைகளில் கூட குறிப்பிட்ட தினங்கள் என்று வைத்திருக்கிறோம் அல்லவா! முருகனை எப்போது வழிபட்டாலும் நல்லதுதான். ஆனால், சூரசம்ஹாரம் நடைபெற்ற சஷ்டி திதி என்பது இன்னும் சிறப்பானது. அதுபோல பெருமாளுக்கு ஏகாதசி, சிவனுக்கு பிரதோஷம், அம்பாளுக்கு பௌர்ணமி, பைரவருக்கு அஷ்டமி, பிள்ளையாருக்கு சதுர்த்தி என்று வழிபாட்டுக்கும் கூட சிறப்பான தினங்கள் உண்டு. வீடோ, மனையோ வாங்கினால் அதை பத்திரப் பதிவு செய்யும் நேரம் முக்கியமானது. வாடகை வீட்டில் குடிபுகும்போதுகூட பால் காய்ச்சுவதை நேரம் பார்த்துத்தான் செய்கிறோம்.

அதாவது அந்த இடத்தை அனுபவிக்கத் துவங்குகிற நேரம் ரொம்பவும் முக்கியம். நாளும் கோளும் நன்றாக இருந்தால் நாலுபேர் செய்ய வேண்டிய வேலை தானாக நடந்து விடும்.
மனிதர்களின் பார்வையில் மேல்நோக்கு, கீழ்நோக்கு என்பதுபோல நட்சத்திரங்களுக்கும் அடிப்பார்வை, நுனிப்பார்வை உண்டு. அதாவது நட்சத்திரப் பார்வையில் மேல்நோக்கு, கீழ்நோக்கு, சமநோக்கு கொண்ட பார்வைகள் உண்டு. காலம் காலமாக தொடரும் திருமண பந்தங்களை உருவாக்க, மேல்நோக்கு பார்வை கொண்ட நட்சத்திரங்கள் மிகவும் உகந்தவையாகும். அதாவது ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களெல்லாம் மேல்நோக்கு நட்சத்திரங்களாகும். இன்னொரு விஷயம்… என்னதான் மேல்நோக்கு நட்சத்திரங்களாக இருந்தாலும் முகூர்த்த நாளன்று பெண்ணுக்கோ, மணமகனுக்கோ சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது. ‘‘சார்… இந்த தேதியில எல்லாம் கல்யாண மண்டபம் காலியா இருக்கு. இதுல ஏதாவது ஒரு நாளை மட்டும் செலக்ட் பண்ணிக் கொடுங்க’’ என்று வில்லிவாக்கத்திலிருந்து ஒருவர் வந்தார். அவர் கொடுத்த நாட்களில் ஒரு நாள்கூட பெண்ணின் நட்சத்திரத்திற்கும், பையனின் நட்சத்திரத்திற்கும் உகந்ததாக இல்லை. ஒத்துப் போகவில்லை. நான் வேறு சில நாட்களை அவரிடம் சொன்னேன். ‘‘எங்க அண்ணா பையன், அக்கா பொண்ணு, என் பெரிய பையன்னு எல்லாருக்கும் இந்த மண்டபத்துலதாங்க கல்யாணம் பண்ணோம். எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க. எங்களுக்கு ராசியான இந்த மண்டபத்துலதான் என் பொண்ணுக்கும் கல்யாணம் முடிக்கணும். வீட்ல சென்ட்டிமென்டா இங்கதான் கல்யாணத்தை வச்சுக்கணும்னு சொல்றாங்க.

தரகரையும், மண்டபத்து மேனேஜரையும் கொஞ்சம் கவனிச்சு இந்த தேதிகளை வாங்கியிருக்கேன். இப்படி உடனே சரியில்லைன்னு ஏங்க சொல்றீங்க. கொஞ்சம் பார்த்து செலக்ட் பண்ணிக் கொடுங்க’’ என்று வற்புறுத்தினார் அவர். நான் பிடிவாதமாக மறுத்து, ‘‘எனக்கு இதுல இஷ்டமில்லை. அப்புறம் உங்க விருப்பம்’’ என்று சொல்லிவிட்டேன். நான்கு மாதங்கள் கழித்து அவர் மீண்டும் வந்தார். கண்களில் சின்ன ஏமாற்றமும், சோர்வும் தெரிந்தது. ‘‘கல்யாணம் முடிஞ்ச நாள்லேர்ந்து ஏதாவது ஒரு பிரச்னை வந்துக்கிட்டே இருக்குங்க. பொண்ணு நல்லாயிருந்தா மருமகனுக்கு உடம்பு முடியாம போயிடுது. மாப்பிள்ளை நல்லாயிருந்தா பொண்ணுக்கு ஏதாவது வந்துடுது. வீடு வாங்கறதுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கற நேரத்துல கேன்சல் ஆயிடுச்சு’’ என்றார். இரு மனம் இணைவதுதான் திருமணம். அப்படி குடும்ப விளக்கு ஏற்றப்படும் நேரம் முக்கியம். அந்த நேரம் நன்றாக இருந்தால்தான் அடுத்தடுத்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். இருவரின் பிறந்த நட்சத்திரத்திற்குரிய தாராபலம், சந்திரபலம் சரியில்லாத நாளாக அந்த முகூர்த்த நாள் இருந்தது. நிறையபேர் பொருத்தம் பார்ப்பதில் காட்டுகிற ஆர்வத்தையும், அதற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தையும் முகூர்த்த நாள் பார்ப்பதில் காட்டுவதில்லை. காலண்டரில் தோராயமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் முகூர்த்த நாளையே பார்த்து முடிவெடுக்கிறார்கள் சிலர். அது பொதுவான முகூர்த்த நாள். இருவரின் நட்சத்திரத்தோடு அது ஒத்துப் போகிறதா என்று கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். ரிசப்ஷனைக்கூட வேறு நாளில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், மண்டபம் இல்லையே என்று முகூர்த்த நாளை மாற்றக்கூடாது.

அதற்கு பதிலாக கோயிலில்கூட கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம். ‘‘எங்களுக்கு நிறைய உறவுக்காரங்க இருக்காங்க. நாங்க எப்படி கோயில்ல…’’ என்று கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை. திருமணப் பத்திரிக்கையை பார்த்தால், ‘இந்த லக்னத்தில்’ என்று ஒரு நேரத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதுதான் முகூர்த்த நாளிலுள்ள முக்கிய நேரம். இந்த லக்னம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்த லக்னத்தில் சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று உண்டு. அதில் ஸ்திர லக்னம் என்பதில் தாலி கட்டுவதுதான் நல்லது. அதாவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்றவை ஆகும். அதிலும் ரிஷபம், கும்பம் போன்ற லக்னங்களை முகூர்த்த நேரமாகக் கொண்டு திருமணம் செய்து கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும். அடுத்து திதியைப் பார்க்க வேண்டும். சில திதிகள் நடைபெறும் நாட்களில் சில கிரகங்கள் வலுவிழப்பதுண்டு. என் தாத்தா ஜோதிட கலாநிதி கனகசபை அவர்கள் பஞ்சகம் என்று திதி, வாரம், நட்சத்திரம், லக்னம், துருவம் என்று ஐந்தையும் பார்ப்பார். இந்த ஐந்தையும் கூட்டி ஒன்பதால் வகுத்து வருவதைக் கொண்டு திருமண தேதியைத் தேர்ந்தெடுப்பார். ஆனால், இப்போது பஞ்சகப்படி எல்லா அம்சங்களும் உள்ள முகூர்த்தநாள் கிடைப்பது அரிதாகி விட்டது. ‘‘நியூமராலஜிப்படி ஐந்தாம் தேதி வரும் நாட்களில் திருமணம் செய்யக் கூடாதாமே? அதனால் வேறு தேதியில் திருமண நாட்களைத் தேர்ந்தெடுத்துத் தரமுடியுமா என்று பலர் கேட்கின்றனர். ஐந்தாம் தேதி அல்லது கூட்டு எண் ஐந்தாக இருக்கும் நாட்களில் திருமணம் செய்தால் கணவன் மனைவி பிரிந்து விடுவர் என்றொரு தவறான நம்பிக்கை பலரிடையே இன்று பரவிக் கிடக்கிறது.

உங்கள் ஜாதகத்தில் புதன் யோகாதிபதியாக அமையும் பட்சத்தில் நீங்கள் தாராளமாக திருமணத்தை ஐந்தாம் தேதியன்று வைத்துக் கொள்ளலாம். தங்களுடைய சம்பிரதாயப்படி பொற்கொல்லரிடம் பசும்பொன்னைக் கொடுத்து தாலி செய்யும் வழக்கம் இப்போது மறைந்து கொண்டு வருகிறது. பாஸ்ட்புட் காலமாதலால் ரெடிமேட் தாலியை வாங்குவோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. இப்படி பொற்கொல்லரிடம் பொன்னைக் கொடுப்பதையோ அல்லது தாலியை வாங்குவதையோ குரு ஹோரையில் செய்வது நல்லதாகும். அதேபோல நீச்சம், பகை இல்லாத சுக்கிர ஹோரையும், வளர்பிறை சந்திர ஹோரையும் நல்லதாகும். முகூர்த்த நாளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை சாந்தி முகூர்த்த நேரத்திற்கும் கொடுக்க வேண்டும். சில முகூர்த்த நாளில் இரண்டு திதி, இரண்டு நட்சத்திரங்கள் யோகங்களெல்லாம் வரும். காலையில் நல்ல திதி, நல்ல நட்சத்திரம், யோகம் வந்திருக்கும். ஆனால், மாலையில் அஷ்டமி, நவமி என்று மாறி விட்டிருக்கும். எனவே சாந்தி முகூர்த்தத்தை மறுநாள் தள்ளி வைப்பது நல்லது. திருமணம் நிச்சயமானவுடன் நேரம் குறிப்பதற்கு முன்பு முடிந்தால் குலதெய்வத்தை வணங்கி விட்டு வாருங்கள். சிலருக்கு குலதெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதியாக இருக்கும்.

இஷ்ட தெய்வம் திருச்செந்தூர் முருகனாக இருக்கும். பரவாயில்லை… இரண்டையும் வணங்கி வாருங்கள். அதோடு மணக்கோலத்தோடு அருளும், பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கும் ராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேக படத்தின் முன்பு இருவரின் ஜாதகத்தையும் வைத்து வணங்கி விட்டு நாள் குறிக்கச் சொல்லுங்கள். கல்யாண கோலத்தில் இருக்கும் இறைவனை வணங்கினால், திருமணம் எந்தத் தடையும் இல்லாது மண வேலைகள் மடமடவென்று முடியும். வாழ்க்கையைத் தொடங்கிய இரட்டைக் கிளிகள், ‘‘அடிக்கடி பாத்திரம், பண்டத்தையெல்லாம் ஏன் தூக்கிக்கிட்டு அங்கேயும் இங்கேயும் அலைய வேண்டியிருக்கு’’ என்று நொந்து கொள்வார்கள். தனக்கென்று ஒரு வாழ்க்கைத்துணை அமைந்து விட்டது. அதுபோல ஒரு வீடு அமைந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பதில் தவறில்லை. ‘வரவில்லாமல் செலவுகள் செய்தோமே’ என்று பாடித் திரிந்த காலங்கள் கொஞ்சம் மாறும். வரவிற்கேற்ப செலவு செய்து அதையும் தாண்டி சொந்த வீட்டுக் கனவும் தம்பதியரிடையே ஆசையாக அரும்பும்.

You may also like

Leave a Comment

twelve + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi