நன்றி குங்குமம் தோழி
மேக்கப், பெண்களின் அவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. கல்லூரி முதல் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் கண்களுக்கு மை, உதட்டில் லிப்ஸ்டிக், முகத்திற்கு காம்பாக்ட் பவுடர் இல்லாமல் வெளியே செல்வதில்லை. தினசரி நாட்களிலேயே தங்களின் அழகிற்கு முக்கியத்துவம் அளிக்கும் பெண்கள் அவர்களின் திருமணநாள் அன்று சொல்லவே தேவையில்லை.
அன்று முழுதும் பிரைட்டாக இருக்க வேண்டும், அதே சமயம் மேக்கப் போட்டது போலவும் இருக்கக் கூடாது, அவர்களின் முகத்தில் உள்ள கண்கள், உதடு போன்றவற்றை ஹைலைட் செய்து அவர்களை அழகாக காண்பிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மேக்கப் டெக்னிக்கினை பயன்படுத்தி மணப்பெண்ணை அழகாக காண்பித்து வருகிறார் கோவையை சேர்ந்த தேவி ஹரிஹரன்.
‘‘பொள்ளாச்சிதான் என்னோட ஊர். அங்கதான் படிச்சேன். எனக்கு படிக்கும் காலத்தில் இருந்தே சொந்தமா பிசினஸ் செய்யணும்னு ஆர்வம் இருந்தது. அதைவிட நான் ரொம்ப வியந்தது ஆசிரியர் வேலை. கல்லூரி முடிச்சிட்டு நான் பேராசிரியராக போகணும்னுதான் விரும்பினேன். ஆனால் நான் கல்லூரி படிப்பை முடிச்சதும் எனக்கு வீட்டில் திருமணம் பேசி முடிச்சிட்டாங்க. கல்யாணத்திற்கு பிறகு கோவையில் நான் செட்டிலாயிட்டேன். அங்கு எம்.பி.ஏ முடிச்சிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
அந்த வேலை எனக்குள் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது. எனக்கு நான் யார் என்று உணர்த்தியது. அங்கு சேர்ந்த ஒரே வருடத்தில் என்னுடைய திறமையால் வேலைக்கான விருதும் கிடைச்சது. அந்த சமயத்தில் எனக்குள் தோன்றிய ஒரே விஷயம் நாலு பேருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தான். ஒரு பக்கம் வேலை பார்த்து வந்தாலும், மறுபக்கம் சொந்தமா தொழில் துவங்குவது பற்றிய சிந்தனையும் இருந்து வந்தது. அதன் முன்னோடியாக பிரான்சைசி முறையில் அழகு நிலையம் ஒன்றை துவங்கினேன். ஆனால் கோவிட் பாதிப்பால், அதனை தொடர முடியாத நிலை ஏற்பட்டது’’ என்றவர் அழகு கலை குறித்து பயிற்சியினை முறையாக மேற்கொண்டுள்ளார்.
‘‘நான் அழகு கலை சார்ந்த பிசினஸ் துவங்கினாலும், எனக்குள் அந்த கலை மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது. அதனால் முறையாக கற்றுக் கொண்டு அந்த துறையில் முழுமையாக செயல்பட விரும்பினேன். மேலும் உலகளாவிய பிரபல கலைஞர்களிடமும் பயிற்சி பெற்றேன். அடுத்து நானே அழகு கலை நிபுணராக வலம் வர ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் என் தோழி ஒருவர் அழகு கலை நிபுணர்கள் தெருக்கு தெரு இருக்கிறார்கள். அதனால் நீ அதையும் தாண்டி இந்த துறையில் வேறு ஏதாவது செய்ய வேண்டும்னு சொன்னா.
மேக்கப்பின் அடுத்த கட்டம் ஏஸ்தெடிக் மேக்கப் என்பதால், அதனையும் முறையாக பயின்றேன். தற்போது அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய மேக்கப் ஸ்டுடியோவினை அமைத்து வருகிறேன். நான் இந்த துறையில் இவ்வளவு தூரம் வளர எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர் மற்றும் எனக்கு பயிற்சி அளித்த குருக்களுக்குதான் நான் நன்றியை சொல்லணும்’’ என்றவர் இந்த துறையில் தனக்கான அடையாளத்தினை எவ்வாறு ஏற்படுத்திக் கொண்டார் என்பதைப் பற்றி விளக்கினார்.
‘‘நான் இந்த துறைக்கு 2016ல் வந்தேன். அப்ப என்னைப் போலவே நிறைய மேக்கப் கலைஞர்கள் இருந்தாங்க. ஆனால் நான் அவங்க என்ன செய்றாங்கன்னு பார்க்கல. நான் என் துறையில் எப்படி சாதிக்கணும்னு என்று மட்டும்தான் யோசித்தேன். ஒவ்வொரு நாளும் நான் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்னுதான் சொல்லணும். என்னுடைய துறையில் நான் பலமாக இருக்கும் போது, நான் ஏன் மற்றவர்களுடன் என் வேலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
என் வேலையினை விரும்புபவர்கள் கண்டிப்பாக என்னைத் தேடி வருவார்கள். அதற்கு அவர்களின் தேவையினை நான் பூர்த்தி செய்யும் அளவிற்கு என் துறையில் நான் கைதேர்ந்து இருக்கணும். அதைத்தான் நான் செய்தேன். எனக்கு என்று ஒரு ஸ்டைலினை பின்பற்றினேன். அது நேச்சுரல் மேக்கப். அதாவது மேக்கப் போட்டு இருந்தாலும், போடாத மாதிரி இருக்கும். ஒருவரை இயற்கையான முறையில் அழகாக காண்பிப்பதுதான் என்னுடைய பிளசாக இருந்தது.
எல்லாவற்றையும் விட நம்பிக்கை முக்கியம். காரணம், இது ஒருவரின் அழகினை வெளிப்படுத்தும் வேலை என்பதால், அவர்கள் பார்க்க அழகாக தெரிய வேண்டும். அதனால் நான் என்ன செய்வேன் என்பதை எந்த வித ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிடுவேன். மேலும் நான் சொல்வதைத்தான் செய்வேன். வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும் கேட்டு அதற்கு ஏற்ப மேக்கப் செய்வதால், பலரும் என்னை நாடி வர ஆரம்பிச்சாங்க.
மேக்கப் பொறுத்தவரை அதில் நிறைய டெக்னிக் இருக்கு. எச்.டி மேக்கப், 3டி மேக்கப், வாட்டர் ப்ரூப் மேக்கப்ன்னு சொல்வாங்க. என்னதான் நாம மேக்கப்போட்டாலும், வாடிக்கையாளர்களும் அவர்கள் பக்கம் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு நாம மேக்கப் போட்டாலும் வியர்வை ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால் அந்த மேக்கப் கலையாமல் பார்த்துக் கொள்ளலாம். இப்போது அனைத்து கல்யாண மண்டபங்களும் ஏசி வசதியுடன் வருவதால், பெரிய அளவில் வியர்வை வெளிப்படாது.
அப்படி இல்லை என்றால் மேடையில் அவர்கள் ஏர்கூலர் வைத்துக் கொள்ளலாம். நான் கல்யாணம் முடிந்தாலும், அவர்களின் சம்பிரதாயங்கள் முடியும் வரை உடன் இருந்து அவர்களின் தேவையினை பூர்த்தி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கேன். காரணம், இப்போது திருமணத்திற்கு பிறகு போட்டோஷுட் எடுக்க விரும்புகிறார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு லேசாக டச்சப் செய்துவிடுவேன். அப்போது தான் அந்த புகைப்படமும் பார்க்க அழகாக இருக்கும். அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான சந்தோஷ தருணம். அதை அழகாக கொடுக்க விரும்புகிறேன்’’ என்றவர் இந்த கலையின் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் மிகவும் முக்கியம் என்கிறார்.
‘‘மேக்கப் பொறுத்தவரை பலவித பிராண்ட்கள் உள்ளன. எந்த ஒரு பிராண்டாக இருந்தாலும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற டெக்னிக் தெரிந்திருக்கணும். அதன் மூலம் பொலிவற்று இருக்கும் சருமத்தை பொலிவாக மாற்றி அமைக்க இந்த டெக்னிக் அவசியம். சிலரின் சருமம் வறண்டு இருக்கும். அதற்கு அவர்களுக்கு மேக்கப் மூலம் மட்டுமில்லாமல், சில குறிப்புகள் மூலமாகவும் மாற்றி அமைக்க தெரிந்திருக்கணும்.
அதற்கு ஏற்ற அழகு சாதன பொருட்கள் என்ன என்று தெரிந்தால்தான் பயன்படுத்த முடியும். மேலும் நாம் பயன்படுத்தும் பொருட்கள் அவர்களின் சருமத்தில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடாது. எல்லாவற்றையும் விட மேக்கப் போடுகிறேன் என்று எல்லா அழகு சாதன பொருட்களையும் சருமத்தில் பயன்படுத்தக்கூடாது. குறைந்த பொருட்கள் பயன்படுத்தினாலும், நாம் போடும் மேக்கப் நேர்த்தியாக இருக்கணும். இன்றைய பெண்கள் மேக்கப் மட்டுமில்லாமல் அவர்களின் சிகை அலங்காரமும் இயற்கையாக இருக்கவே விரும்புறாங்க.
அவங்க தேவை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். நான் திருமண மணப்பெண்கள் மட்டுமில்லாமல், ஃபேஷன் ஷோ மற்றும் பிரபலங்களின் ஃபோட்டோ ஷுட் போன்றவற்றுக்கும் மேக்கப் அளித் வருகிறேன்’’ என்றவர் ஏஸ்தெடிக் மேக்கப் குறித்து விவரித்தார்.
‘‘ஏஸ்தெடிக் மேக்கப் என்பது நாம் சாதாரணமாக போடப்படும் மேக்கப்பின் அடுத்த நிலை. சாதாரண மேக்கப் சருமத்தின் மேல் பகுதியில் மட்டும்தான் இருக்கும். முகத்தை சோப் கொண்டு கழுவினால் கலைந்திடும். ஏஸ்தெடிக் சருமத்தில் ஊடுருவி செய்யப்படும் அழகு சிகிச்சை என்பதால், நிலைத்து இருக்கும். நாற்பது வயதிற்கு மேல் பலருக்கு கண்களுக்கு கீழ் கருவளையம், கண்களுக்கு கீழ் பகுதியில் சதை வளர்ச்சி, கண்களின் பக்கவாட்டில் சுறுக்கம் போன்றவை ஏற்படும். இதற்கு மைக்ரோநீடிலிங், ஹைட்ரா ஃபேஷியல், ஆக்சினோ ஃபேஷியல் போன்ற பல வகை சிகிச்சை முறைகள் மூலம் இதனை நீக்கி இளமையான தோற்றத்தினை அளிக்க முடியும். நாம வெளித்தோற்றத்தில் என்னதான் சிகிச்சை அளித்தாலும், அதற்கான பராமரிப்பும் அவசியம்.
அதாவது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது அவசியம். நல்ல ஊட்டச்சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட வேண்டும். டென்ஷனை குறைத்து மனதினை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை நம் உடலில் உள்ள அணுக்களுக்கு புத்துயிர் அளிக்கும் என்பதால், அவர்களின் தோற்றத்தில் நல்ல மாற்றத்தினை பார்க்க முடியும். எல்லாவற்றையும் விட இந்த தொழில்நுட்பத்தினை மிகவும் கவனமாகவும் முறையாகவும் பயன்படுத்த வேண்டும். தற்போது ஏஸ்தெடிக் சிகிச்சையினைதான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்’’ என்றவர் இது குறித்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளார்.
‘‘என்னதான் பெண்கள் பல துறைகளில் முன்னேறி வந்தாலும், அவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவு. அதனால் இந்த கலை குறித்த பயிற்சியினை பெண்களுக்கு அளித்து அவர்களை வளர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. என்னுடைய ஸ்டுடியோ பொறுத்தவரை இங்கு அழகு நிலையம் மட்டுமில்லாமல், ஏஸ்தெடிக் சிகிச்சை மற்றும் இது குறித்து பயிற்சியும் அளிக்க இருக்கிறேன். அழகு என்பது தன்னம்பிக்கை. கண்ணாடி முன் ஒரு ெபண் தன்னைப் பார்க்கும் போது, அழகாக தெரிந்தால், அவளுக்குள் அதுவே பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அதை நான் கொடுக்க விரும்புகிறேன்’’ என்றார் ேதவி ஹரிஹரன்.
தொகுப்பு: ஷன்மதி