*மானியம் வழங்கி ஊக்குவிக்க கோரிக்கை
தேவாரம் : கோம்பை பகுதியில் பூக்கள் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் குறைந்துள்ளதால், மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேளாண்துறையினர் முன் வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.உத்தமபாளையம் வட்டாரத்தில் பல்லவராயன்பட்டி, டி.சிந்தலைசேரி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் பூக்கள் விவசாயம் நடந்து வந்தன. அதன் பின்னர், சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமாக கோம்பை, பல்லவராயன்பட்டி பகுதியில் நடந்தது.
இடைக்காலங்களில் குறிப்பாக கடந்த 15 வருடம் முன்பு மழை இல்லாத நிலையில் பூக்கள் விவசாயம் சுருங்கியது. இதற்கு முதல் காரணமாக மழையின்றி அனைத்து கண்மாய்கள், குளங்கள் வறண்டது தான்.
பூக்கள் விவசாயத்தை பொருத்தவரை மழை இல்லாவிட்டாலும், ஆரம்ப கால பராமரிப்பு என்பது மிக முக்கியம். வடகிழக்கு பருவமழை, கோடைமழை, தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் போது, அணைத்து விவசாயங்களும் வளம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், பருவமழையை நம்பி பெரும்பாலும் விவசாயிகள் ஏமாற்றத்துடனே உள்ளனர். இந்நிலையில், பருவமழை தொடர்ந்து பெய்யும்போது மல்லிகை, பிச்சிப் பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் சாகுபடி அதிகமான ஏக்கர் நிலங்களில் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே இந்த முறை சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக பூக்கள் விவசாயத்திற்கு தேவையான மானியங்களை வழங்க வேண்டும். மற்ற சாகுபடிக்கு வழங்குவது போல் உரங்கள், இடுபொருட்கள், நாற்றுகள் வாங்குவதற்கு மானியங்களை அறிவிக்க வேண்டும். தொடர்ந்து, பூக்களை சாகுபடியில் அதிக மகசூலுக்கான உத்திகளையும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வுகளையும் விவசாயிகளிடத்தே ஏற்படுத்த வேண்டும்.
தொடர்ந்து செடிகளின் வளர்ச்சிகளை கண்காணித்து பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றில் இருந்து பயிர்களை பாதுகாக்க தகுந்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். இதன் மூலம் மீண்டும் பூக்களின் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.