சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. 3 நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்ததால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 14ம் தேதி ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. தொடர்ந்து, கடந்த வாரம் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,560 வரை குறைந்தது. இது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
1ம் தேதி பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,160க்கும், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,520க்கு விற்றது. மூன்றாவது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,105க்கும், பவுனுக்கு ரூ.320 ரூபாய் உயர்ந்து ஒரு பவுன் 72,840க்கும் விற்பனையானது. தொடர்ந்து 3 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வெள்ளி விலையும் நேற்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.121க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.