நாட்டையே அதிர்ச்சி அடைய செய்த சமீபத்திய செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பது தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் சிக்கிய விவகாரம் தான். நடிகை ரன்யா ராவ் தமிழ், கன்னடம் படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கர்நாடக வீட்டு வசதி வாரிய டிஜிபியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பெங்களூரு ஏர்போர்ட்டில் தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்தனர்.
கடந்த மூன்று மாதங்களில் துபாய்க்கு பல முறை அடிக்கடி சென்று வந்த ரன்யா ராவ் மீது வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும் தன்னை டிஜிபி மகள் என்று கூறி சோதனையை தவிர்த்து போலீஸ் பாதுகாப்புடன் வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் அவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய போது அதிர்ச்சி அடைந்தனர். அவரது ஆடையில் மறைத்து 14 கிலோ தங்கம் கடத்தி வந்துள்ளார். மேலும் அதற்காகவே பிரத்யேக ஆடையை வடிவமைத்து அணிந்துள்ளார்.
இதையடுத்து அவர் வசிக்கும் பெங்களூரு வீட்டில் நடந்த ரெய்டில் கோடிக்கணக்கில் பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்க கடத்தலுக்கு நடிகை ரன்யா ராவுக்கு பின்புலமாக இருப்பவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக கர்நாடக பாஜவினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது வெறும் வதந்தி, அப்படி எந்த அமைச்சருக்கும் தொடர்பில்லை என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதற்கிடையில் துபாயில் நடிகை ரன்யா ராவ் இருந்த போது பிரபல மடாதிபதி அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்தும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜூவல்லரி உரிமையாளர்கள் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இப்படி தினம் ஒரு புதிய அதிர்ச்சி தகவல்களுடன் தங்க கடத்தல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகை மட்டும் தனி ஒருவராக இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. அவரது பிரபலம் மற்றும் போலீஸ் அதிகாரி மகள் ஆகியவற்றை தங்கள் தொழிலுக்கு யாரோ கருவியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தங்கம் கடத்தல் வழக்கில் போலீஸ் அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், ரன்யா ராவுக்கு விமான நிலையத்தில் மரியாதை சலுகைகள் வழங்கியது குறித்தும் விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரியை கர்நாடக மாநில அரசு நியமித்துள்ளது. எனவே விசாரணையில் இன்னும் எத்தனை பிரபலங்கள் சிக்குவார்கள் என்று ெபாறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் பிரியங்கா திவேதி, சஞ்சனா ஆகிய கன்னட நடிகைகள் சிக்கியது பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். இந்நிலையில் தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைதாகியுள்ளது கர்நாடகாவில் மட்டுமல்ல நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.