திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கேப்ஸ்யூல்கள் வடிவில் கடத்தி வரப்பட்ட ரூ.1.48 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 பயணிகள் தங்கள் உடம்பில் மறைத்து கொண்டு வந்த 2 கேப்ஸ்யூல்களில் பசை வடிவிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தின் எடை 834 கிராம் எனவும், இதன் மதிப்பு ரூ.48.50 லட்சம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு துபாயில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 பயணிகளின் உடம்பில் மறைத்து கொண்டு வந்த கேப்ஸ்யூல்களில் பசை வடிவிலான 1.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.05 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 2 நாளில் ரூ.1.48 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.