சென்னை: தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 11ம் தேதி முதல் 20ம் தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,024உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெரும்பாலும் ஆடி மாதத்தில் தங்கம் விலை குறைவாக தான் இருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஆடி மாதம் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில் 21ம் தேதி தங்கம் விலை திடீரென சரிவை சந்தித்தது. சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.44,560க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை திடீரென குறைந்தது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்தது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,555க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,440க்கும் விற்கப்பட்டது. 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.