சென்னை: தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 வரை குறைந்து ஒரு சவரன் ரூ.45,800க்கு விற்கப்பட்டது. விலை குறைவால் தீபாவளி பண்டிகைக்காக நகை வாங்குவோர் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்தது. இந்தியா முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்கு தங்கம், வெள்ளி விற்பனையானது. தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.
அதாவது, 14ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,615க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,920க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,645க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,160க்கும் விற்கப்பட்டது. 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 வரை உயர்ந்தது.
தொடர்ந்து, நேற்று தங்கம் விலை பெயரளவுக்கு சவரன் ரூ.80 குறைந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. அதே போல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.