சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,000த்திற்கும் கீழ் சென்றது. தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்கப்பட்டு புதிய உச்சத்தை கண்டது. ஒன்றிய பட்ஜெட்டில் தங்க இறக்குமதிக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் தங்கம் விலை கிடுகிடுவென சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் வரை தங்கம் விலை குறைந்தது. இந்த அதிரடி விலை குறைவுக்கு பிறகு தங்கம் ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.51,600க்கு விற்கப்பட்டது. 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 5ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.51,760க்கு விற்கப்பட்டது. நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.6,400க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.51,200க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை ரூ.560 குறைந்து, ரூ.5,0640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.87க்கு விற்பனையாகிறது.