சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,200க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் 23ம்தேதி தங்கம் விலை கிடுகிடுவென சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் வரை தங்கம் விலை குறைந்தது. இந்த அதிரடி விலை குறைவுக்கு பிறகு தங்கம் ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.51,600க்கு விற்கப்பட்டது. 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 5ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை சவரன் ரூ.51,760க்கு விற்கப்பட்டது. நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.6,400க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.51,200க்கும் விற்கப்பட்டது.