சென்னை: தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வந்தது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால், தங்கம் விலை ஏறிய வேகத்தில் கிடு,கிடுவென குறையத் தொடங்கியது. கடந்த 7ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.50640க்கு விற்கப்பட்டது. 8ம் தேதி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து சவரன் ரூ.50800க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,425க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து சவரனுக்கு ரூ.51,400க்கும் விற்கப்பட்டது. இந்த திடீர் விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,445க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,560க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.